மாண்புற வாழ்க

- ராஜாஜி ராஜகோபாலன்

Saturday, April 18, 2009

உங்கள் தொழில் வாழ்க்கை: மாற்றங்களும் முன்னேற்றங்களும்



இன்றைய பொழுதில் உங்களைச் சுற்றியுள்ள பலர் வேலையிலிருந்து விலக்கப்படுவதைக் கண்டுகொண்டு உங்கள் வேலையில் நீங்கள் பாதுகாப்பாயிருக்கிறீர்களென நம்பிக்கொள்வது மிகக் கடுமையான காரியமாகும்.

நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: நீங்கள் ஒரு போட்டியில் தோற்பீர்களானால் நிச்சயம் ஏமாற்றமடையக்கூடும்; நீங்கள் அதற்குத் துப்பரவாக முயற்சிக்காதுவிட்டீர்களோ உண்மையிலேயே தொலைந்தீர்கள்.

நமது சொந்த வாழ்க்கை போன்று தொழில் துறையிலும் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. இன்றைய தொழில் துறையில் மாற்றங்கள் அடிக்கடி நிகழும், அதுமட்டுமல்ல சில வேளை பெரியளவில் நிகழும்; எதிர்ப்பாராமலும் நிகழும்.. இது நிச்சயமாக உங்கள் கையில் இல்லை. ஆகவே அவற்றோடு கட்டாயமாக ஒத்துப்போங்கள் அல்லது டைனோஸார் போலச் செத்துப்போங்கள்.

தொழில் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்போது அவற்றை வெற்றியடைவதற்கு இதோ சில வழிகள்:

• உங்களைச் சுற்றி நடப்பவற்றின்மீது எப்போதும் கண்ணாயிருங்கள். உங்கள் தனிப்பட்ட எண்ணங்கள் உங்கள் பார்வையை மறைக்க இடமளியாதீர்கள்.

• எந்த விஷயத்திலும் ஒருபோதும் உடன் முடிவுக்குவர அவசரப்படாதீகள். கவனமாகச் செவிமடுப்பீர்களானால் உங்களுடன் பேசுபவரின் செல்வாக்கையும் நல்லெண்ணத்தையும் பெற நிறைய வாய்ப்புண்டு.

• கூட வேலைசெய்பவர்களின் நல்ல கருத்துகளுக்கும் தீர்மானங்களுக்கும் ஒப்புதல் கொடுங்கள். அவர்களுக்குத் தேவையான வேளையில் உதவத்தயாராயிருங்கள். அவர்களுக்கு ஆதரவு காட்டுங்கள். அவர்களின் பிழைகளைக் கண்டுகொள்ளாதீர்க்கள்; திறமையப் பாராட்டுங்கள்.

• சில வேளைகளில் மாற்றங்கள் சம்பந்தமாக உங்கள் மனதில் சந்தேகங்களும் கேள்விகளும் எழும்பக்கூடும். இது எப்போதுமே மிகவும் நலமானதோர் சிந்தனைப் போக்கு. ஆனால் உங்கள் சந்தேகம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்தியின்பாற்பட்டதா அல்லது உங்கள் பாரபட்சமான அல்லது ஆழமற்ற சிந்தனையால் ஏற்பட்டதா என்று உங்களையே முதலில் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்க்களிடம் உங்கள் சந்தேகத்தை அல்லது கேள்வியை எழுப்பி விடைகண்டுகொள்ளுங்கள். நீங்கள் எழுப்புகின்ற ஒவ்வொரு உருப்படியான கேள்வியும் உங்கள் முன்னால் விரிக்கப்படும் செங்கம்பளமாகும்.

• புதிய மாற்றங்களையும் அவற்றின் பலாபலங்களையும் பற்றி அடிக்கடி படித்துக்கொண்டேயிருங்கள். உங்கள் படிப்புக்கு வயதெல்லை கிடையாது; வகுப்பறையில்தான் படிக்கவேண்டுமென்பதில்லை. எங்கும் படிக்கலாம், எதிலும் படிக்கலாம். முக்கியமாக நீங்கள் அன்றாடம் செய்யும் பிழைகளிலிருந்தே நிறையப் படிக்கலாம்.

• எப்போதும் புதியவற்றைக் கேட்டறிவதில் ஆர்வமுள்ளவராயிருங்கள். தங்கள்
அறிவைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறவரிடமிருந்து எவற்றையெல்லாம் அறிந்துகொள்ளமுடியுமோ அவற்றையெல்லாம் அறிந்துகொள்ளப்பாருங்கள்..

• ஆர்வத்துடன் வாசியுங்கள் - புத்தகங்கள், பத்திரிகைகள், இண்டர்னெட் – எதையும்விடாது வாசியுங்கள். முக்கியமான விஷயங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை அடிக்கடி மீளவாசிப்பதற்கு வசதியான முறையில் கோவை செய்துகொள்ளுங்கள்.

• தொழில் வாழ்க்கையில் உங்கள் விருப்பதிற்கு மாறாக ஏற்படும் திருப்பங்களும் வளைவுகளும் எப்போதுமே தவறானவையாக இருக்கவேண்டுமென எண்ணிக்கோள்ளாதீர்கள். மனிதர்களைப்போன்றே தொழில் நிறுவனங்களும் மாற்றங்களை அனுசரித்துப் போகவேண்டியவையே. அவற்றை அவதானித்து நன்கு அறிந்து விளங்கிக்கொள்வதன் மூலம் நீங்கள் அத்துறையில் "திறமைசாலி" என்ற பெயரைச் சம்பாதிதுக்கொள்ளலாம். அத்துடன் மாற்றங்களை ஏற்படுத்தும் அலுவல்களில் தலைமத்துவத்தை நிரூபிதுக்கொள்ளலாம். இது மாற்றங்களின் மீதான கட்டுப்பாட்டையும் அவற்றை நடைமுறைப்படுத்தும் பணிகளையும் உங்கள் கையில் கொண்டுவர வழி சமைக்கும்.

• புதிய தகவல்களைத் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலம் மற்றவர்களுக்கு உங்களால் வழங்கக்கூடிய உதவிக்கான மூலாதாரங்களை விருத்திசெய்துகொள்ளுங்கள்.

• தமது பதவிகளில் முன்னேறிக் கொண்டிருப்போர்களுடனான உறவை வளர்த்துக்கொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டுங்கள். அவர்கள் அறிந்துள்ள விஷயங்கள் எவையென்பதையும் அவற்றில் உங்களுக்குத் தெரியாதவை எவையெனும் இருப்பின் அவற்றையும் தெரிந்துகொள்வதில் அக்கறை காட்டுங்கள்.

• உங்கள் தொழில் பற்றிய சஞ்சிகைகளில் முக்கியமான கட்டுரைகளை வாசித்தறிந்துகொள்ளுங்கள்.

• பிரச்சனைகளைத் தீர்ப்பவராயிருங்கள்; அவற்றை உண்டாக்கும் ஆளாக உங்களை ஆக்கிக்கொள்ளாதீர்க்கள். பிரச்சனைகளைக் கண்டறிவதற்கே தமது வாழ்வுக்காலத்தை எவரும் செலவளிக்கலாம். அத்துடன் பிரச்சனைகள் எல்லா இடமும் மலிந்து போயிருக்கின்றன. இவற்றைச் சுட்டிக்காட்டுவதையே உங்கள் வேலையாகக்கொண்டால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களிடமிருந்து மெல்ல மெல்ல விலகத்தொடங்கி விடுவார்கள். அகவே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விருப்புடையவராயிருங்கள். அத்துடன் அப்படி விருப்பமுள்ளவரெனக் உங்களைக் காட்டிக்கொள்வதிலும் ஆர்வமாயிருங்கள். மேலும் அவற்றைத் தீர்ப்பதற்குரிய நேரத்தையும் தீர்மானியுங்கள். இது உங்களுக்கு "Fixer" என்ற பெயரைச் சம்பாதித்துத் தரும். இத்தகைய ஆள்தான் பதவி உயர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை மறவாதீர்கள்.

• தம்மைப்பற்றி நம்பிக்கையும் பெருமையும் கொள்பவர்கள் நல்ல வேலையாட்களாக இருக்கிறார்கள். மேலும், நகைச்சுவையுணர்வு அவர்களை உடல், மன ரீதியாக லேசாக்கி வேலையில் மாற்றங்களையும் திருப்பங்களையும் வரவேற்கும் தன்மையுடையவர்களாக்குகின்றது.

• தொழில் வாழ்க்கையில் ஒவ்வொரு புதிய நிலைவரம் அல்லது திடீர் மாற்றம் இரண்டு வகையில் நோக்கப்படலாம்: ஒன்று சிக்கல் மற்றது சந்தர்ப்பம். சிக்கலைச் சிக்கலாகவே நீங்கள் கருதுகின்றவரைக்கும் அது தொடர்ந்து அவிழ்க்க முடியாத சிக்கலாகவே இருக்கும். இதற்கு மாறாக,, சிக்கலை உங்களுக்குக் கிடைத்த நல்லதோர் சந்தர்ப்பமாகக் கருதிக் கொள்ளுங்கள்; அதனைத் தீர்க்க உடன் நடவடிக்கை எடுங்கள். உங்களை எதிர் நோக்கும் ஒவ்வொரு சவாலையும் உங்களுடைய புத்தினுட்பத்தையும் எதிர்நீச்சல் போடும் திறமையையும் பரிசோதனை செய்யும் கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சிலர் மற்றவர்கள்மீது தங்கியிருக்கிறார்கள். இவர்களுடைய திறமை சோதிக்கப்படும்போது "இது என்னுடைய பொறுப்பல்ல" என்று கூறித் தப்பிக்கப்பார்ப்பார்கள். ஆனால் தங்கள்மீதெ தங்கியிருப்பவர்கள் அல்லது தங்கள் திறமைமீது நம்பிக்கையுள்ளவர்கள் "நான் அதைச் செய்து காட்டுவேன், பாருங்கள்” எனத் துணிந்து கூறுவார்கள். இவர்களே இன்றைய உலகத்தை ஆளப்போகிறவர்கள்.

இவர்களுள் நீங்களும் ஒருவராயிருக்கப் பாருங்கள்.

Thursday, April 16, 2009

இன்று புதிய தினம்


இன்று புதிய தினம்
இனி என்றுமே நல்ல தினம்

இறந்த காலத்தில் வாழ
எனக்கினி நேரம் இல்லை
பழைய கவலைகளை எண்ண
எனக்கினிப் பொழுது இல்லை

இன்றிலிருந்து என்
ஒவ்வொரு நினைவும் புதியது
ஒவ்வொரு கணமும் புதியது
ஒவ்வொரு செயலும் புதியது
ஒவ்வொரு சுவடும் புதியது

இது எனது தீர்மானம்
எவரும் சொல்லிச் செய்யவில்லை

எனக்கு நன்றாகவே தெரியும்
இத்தினம் நன்றாகவே அமையும்

இன்று புதிய தினம்
இனி என்றுமே நல்ல தினம்
Courtesy: Ace Troubleshooter

Baseball விளையாட்டின் இறுதியில் Closer என அழைக்கப்படும் கதையை முடிப்பவர் வருவார். பெரும்பாலும் இவர் கையிலேயே இவரது குழுவின் அன்றைய வெற்றி தோல்வி தங்கியிருக்கும். நேற்றைய விளையாட்டில் இவர் செய்த பிழைகளினாலேயே எதிரணி வெற்றியை ஈட்டிக் கொண்டது. ஆனால் இன்று அவர் என்ன சொல்கிறார்?

"அது நேற்றைய கதை. நேற்றைய பிரச்சனைகளும் பிழைகளும் இன்றைய விளையாட்டில் ஆட்சிசெய்ய நான் விடப்போவதில்லை. ஏனெனில் இன்று புதிய தினம்."

நாமெல்லாரும் ஒருவகையில் Baseball ஆட்டக்காரர்கள்தான்; எமது கையில்தான் இன்றைய வெற்றி தோல்வி தங்கியிருகிறது. ஆகவே இவ்வெற்றிக்கான பணிகளை உதயத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். இன்றைய தினம் புதிய தினமாக மலர வேண்டுமானால் இவற்றை முதலில் மனதிலிருத்திக்கொள்ளுங்கள்:

இன்றைய கால நிலையையோ சாலைப் போக்குவரத்தையோ நம்மைச் சுற்றியுள்ளோரின் மன நிலையையோ மாற்றியமைக்கக்கூடிய சக்தி நம்மிடம் இல்லாமலிருக்கலாம். ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கமைவாக எமது மனப் பக்குவத்தை நிச்சயமாக மாற்றிக் கொள்ளமுடியும். இக் காரியத்தை இத் தினத்தின் ஆரம்பத்திலேயே உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

வாழ்க்கையில் பிழைகளெனக்கருதக் கூடியவாறான எதுவும் கிடையாது. பிழைகள் நாம் கற்கும் பாடங்களாகும். இதுபோன்றே எதிர்மறையான அல்லது தோல்வியெனக் கருதக்கூடிய அனுபவங்களெதுவும் இல்லையென முதலில் உணர்ந்துகொள்ளுங்கள். இவையெல்லாம் உங்கள் வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்கள், வெற்றிக்கான வாசற்படிகள். இதோ ஒரு நண்பரின் கருத்துக்கள்:

இன்றைய தினத்தை எதிர் நோக்கும்போது உங்கள் கனவுகளுக்கு ஆக்கசக்தியைக் கொடுங்கள்; உங்கள் நம்பிக்கைகளைக் கொழுந்துவிட்டெரியச் செய்யுங்கள். இன்றைய தினத்தை ஒரு புதியதினமாக நினைத்துக் கொண்டால் மட்டும் போதாது; புதிய தினமாகக் கருதிச் செயல்படவும் வேண்டும்.

"விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை
புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணிச்
சலிக்கும் மனதில் சந்தோசமில்லை;

நாளை என்பதில் நம்பிக்கை வைத்து
இன்று என்பதை எடுத்து நடத்து;

கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்துப்
புன்னகை அணிந்து போரை நடத்து."

நன்றி: கவிப்பேரரசு வைரமுத்து

Wednesday, April 8, 2009

கவலை கொள்ளாதே மனமே

எனது கவலைகளை நான் மீள நினைக்கும்போது ஒரு முதியவனின் கதை நினைவுக்கு வருகிறது. அவன் இறக்கும் வேளையில் கூறினான்: "என் வாழ்க்கையில் எண்ணற்ற பிரச்சனைகள்; அவற்றில் பெரும்பாலானவை ஒருபோதுமே நிகழ்ந்ததில்லை." கவலை மனதின் பெரும்பாலான சக்திகளைப் பலயீனப்படுதிவிடுகிறது என்பதை அறிவீர்களா? இதுவே காலப்போக்கில் உங்கள் ஆத்மாவை ஒடுக்கிவிடும் அபாயத்தை உண்டாக்குகிறது.

சிலர் பழைமையான ஒரே விஷயங்களையே மீண்டும் மீண்டும் சிந்திதுக் கொண்டிருக்கிறார்கள். இருக்கிற நல்லவற்றின்மீது மனதைச் செலுத்துவதை விடுத்து இல்லாத கவலைகளை எண்ணிப் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

சிலர் கனியாமற்போன காதலை நினைத்துக் கதறிக்கொண்டிருகிறார்கள். சிலர் கடன் தொல்லைகளைப்பற்றிப் பேசியே தமது கசப்பான நினைவுகளை இரைமீட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் உடைந்துபோன உறவுகளையும் காணாமற்போன பொருட்களையும் அனுபவிக்க மறந்த இளமைக் காலத்தையும் கணவன் அல்லது மனைவி மீதுள்ள சந்தேகத்தையும் திரும்பத் திரும்ப நினைத்துத் தம்மைத்தாமே சித்திரவதை செய்துகொள்கிறார்கள். இன்னும் மோசமான ஆட்கள் தம்மை இழிவாக நடத்தும் அலுவலக முகாமையாளரையும் 401 இல் குறுக்கே தனது காரைச்செலுத்திக் குலை நடுங்கவைத்த முகந்தெரியாத ஆளையும் தனது வியாபாரம் கெட்டுப்போனதற்குத் தன்னைத் தவிர மிச்சமுள்ள எல்லாரையும் திட்டுவதிலேயே தமது பொன்னான வேளைகளை வீணடிக்கிறார்கள்.

இவர்கள் இன்றைய காலத்தின் எசமானர்கள் அல்லர், கடந்தகாலத்தின் கைதிகள்; தங்கள் மனத்தைக் கவலைகளென்னும் காளான்கள் நிறைந்த சிறைக் கூடமாக்கி அதனுள்ளே நிரந்தரமாகத் தம்மைப் பூட்டிக்கொண்டார்கள். அதுமட்டுமன்றி, தமது வாழ்வின் ஒவ்வொரு பொழுதும் எவ்வளவு உன்னதமானது என்பதையோ கவலைகள் இப்பொழுதுகளை அநியாயமாகக் கொள்ளைகொண்டுபோகின்றன என்பதையோ அறியாதிருக்கிறார்கள்.

கவலையில் மூழ்குவதன்மூலம் தனது வாழ்வில் அடையவேண்டுமென்று
நினைக்கின்ற அத்தனையையும் சிருஷ்டித்து வழங்கும் வல்லமைவாய்ந்த மனதின் எல்லையற்ற சக்திகளை இவர்கள் மழுங்கடித்துவிடுகிறார்கள். இவர்கள் தமது மனவோட்டங்களை மேற்பார்வை பார்த்து முகாமைப்படுத்துவதன் மூலம் தமது வாழ்க்கையையே மாற்றியமைக்க முடியும் என்பதனை முதலில் அறிந்துகொள்ளவேண்டும்.

உங்கள் மனதில் கவலைகள் சூழும்போது என்ன உண்டாகிறது என்பதைப் பாருங்கள். அவை எம் மனதில் இயற்கையாகவே ஊற்றெடுக்கும் அறிவையும் ஆக்கசக்தியையும் இல்லையென்று ஆக்கிவிடுகின்றன. உங்கள் மனம் காற்றிழந்த பந்துபோல் விரைவில் சோர்ந்து களைப்படைந்து விடுகிறது.

பெரும்பாலானோர் தமது சிந்தனைகளின் நோக்கையும் போக்கையும் துப்பரவாக அறியாமலிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல சிறப்பான சிந்தனைகள் சிறப்பான வாழ்வுக்கு வழிசமைக்கின்றன என்பதையே தெரியாதிருக்கிறார்கள். இது பலவீனமுள்ள மனதின் பிரதிபலிப்பாகும். பலவீனமுள்ள மனம் பலவீனமான சிந்தனைகளையே ஊக்குவிக்கின்றன. கவலைகளே இவற்றில் முதலிடம் வகிக்கின்றன.

வலுவுள்ளதும் ஒழுங்காற்றப்பட்டதுமான மனம் உண்மையில் எண்ணற்ற அற்புதங்களை ஏற்படுத்தும். எவரும் இவற்றை அன்றாடப் பயிற்சிமூலம் அறுவடைசெய்து கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க விரும்புவீர்க்களேயானால் உங்கள் சிந்தனைகளின் நோக்கையும் போக்கையும் பற்றி முதலில் நிறையக் கவனமெடுங்கள்.

மனமென்னும் மீகாமன்


இயற்கை உங்களைப் படைத்தது ஆனால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நீங்கள்தான் படைக்க வேண்டும். இதற்கு வேண்டிய உறுதுணைகள்யாவும் உங்களுடன் ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்டிடுக்கின் றன. உங்கள் ஒரே வேலை என்னவெனில் மகிச்சிக்கான அம் மூலாதாரங்களைக் கண்டுபிடிப்பதும் அம்மகிழ்ச்சி மூலம் உங்கள் வாழ்வை ஒளிபெறச்செய்வதுமாகும்.

மனம்தான் இயற்கை மனிதனுக்கு அளித்த மாபெரும் பரிசு. நம்மில் பலர் தமது மனதின் அளப்பரிய சக்தியை அறியாதிருக்கிறார்கள். இவர்கள் அவசியமற்ற எண்ணங்களையும் கவலைகளையும் தம் மனதில் ஓடவிடுவதன்மூலம் அது ஆற்றக்கூடிய எண்ணற்ற வித்தைகளை நிகழாமல் தடுத்துவிடுகிறார்கள். இதனால் மன, உடல் ரீதியாக எதனை நிறைவேற்றவேண்டுமேன விழைகிறோமோ அதனை இல்லையென்று ஆக்கிவிடுகிறார்கள்.

உங்களுக்குத் தெரியுமா உங்கள் மனம் ஒரு அற்புதமான சேவகன் என்பதை? அதுமட்டுமல்ல அது மிக மோசமான எசமானும் கூட.

நீங்கள் எதிரிடையாகச் சிந்திக்கிற ஆளாகவிருப்பின் இந் நிலைவரம் உங்கள் மனதைப் முறைப்படி பண்படுத்த அக்கறை எடுக்காததினாலும் நல்லவற்றின்மீது கவனம் செலுத்தும் வகையில் அதனைப் பழக்கப்படுத்த நேரம் செலவழிக்காததினாலும் ஏற்பட்டதென அறிந்துகொள்ளுங்கள். உங்கள் உடம்பிலுள்ள தசைகளைப்போன்றதெ உங்கள் மனமும். தசைகளைப் பண்படுத்த நிறையப் பயிற்சி செய்கிறீர்கள். மனதைப் பண்படுத்தப் பயிற்சி எதையேனும் செய்திருக்கிறீர்களா?

முறையான பயிற்சியற்ற மனம் படிப்படியாகப் பலமிழந்துவிடுகிறது . பயிற்சியின் மூலம் அதற்கு ஒளியூட்டுவீர்களேயானால் விரைவில் அது பல அற்புதங்களை நிகழ்த்துவதைக் கண்டு பிரமித்துப்போவீர்கள். ஆகவே உங்கள் மனம் என்னும் கப்பலுக்கு நீங்களே மீகாமன் ஆதல் வேண்டும். அதை வழி நடத்துவதற்குப் புதிதாக எதையும் நீங்கள் கண்டுபிடிககத் தேவையில்லை.

முதற்கண் உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நன்கு தீர்மானித்துக்கொள்ளுங்கள். உங்கள் கவனம் உன்னதமான நோக்கத்தினால் அல்லது அதிவிசேடமான வேலைத் திட்டத்தினால் ஈர்க்கப்படும்போது உங்களின் முழுச் சிந்தனைகளும் தமது கட்டுகளை அறுத்துக் கோண்டு வெளிவர ஆரம்பிக்கின்றன; உங்கள் மனம் விதிக்கப்பட்ட எல்லைகளைப் புலன்களால் வசியமாக்குகிறது; உங்கள் உள்ளுணர்வு எல்லாத் திசைகளையும் நோக்கிச் சிறகடிக்கிறது; அத்துடன் நீங்கள் புதியதும் பெரியதும் அற்புதமானதுமான உலகில் சஞ்சரிப்பதைப் படிப்படியாக உணரத் துவங்குவீர்கள். உங்களுக்குள் உத்வேகமும் திறமைகளும் உயிர்ப்பெறுதலும் நீங்கள் முன்னெப்போதும் கனவுகூடக் கண்டிருக்காத மாபெரும் மனிதனாகப் புத்துயிரெடுப்பதை உணர ஆரம்பிப்பீர்கள். உங்கள் மன நலத்தைப் பேணுவதே இம்மாபெரும் மாற்றத்திற்கான முதற் செயற் பாடாகும்.

உங்களைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நேர் வழியில் அணுகிச் சக்தியூட்டி உங்கள் மனதை மென்மைப் படுத்த ஆரம்பிக்கும்போதெ ஏலவேயுள்ள கவலைகளை ஒழித்துவிடுவீர்கள்; கடந்த காலத்தின் கைதியாக இருப்பதைத் தவிர்த்துக்கொள்வீர்கள்; உங்கள் எதிர்க்காலத்தைக் கட்டியெழுப்பும் சிற்பியாவீர்கள்.

உங்கள் அன்றாட வாழ்வில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டிய அர்த்தமுள்ள சங்கதிகளான ஆரோக்கியமான உணவு, அன்றாட உடற்பயிற்சி மற்றும் ஒழுங்கான வாழ்க்கைமுறை ஆகியவை உங்களின் உன்னதமான வாழ்க்கைக்கு அவசியமானவையே. ஆயினும் வலுவான நற்பண்பு, மனவுறுதியை மேம்படுத்தும் திறன், என்றும் தளராத ஊக்கம் ஆகியவையும் இவற்றின் மேலாக உங்கள் மனதைப் பண்படுத்தும் திறனும் சேர்ந்துகொண்டால் உங்களை எங்கும் முன்னிலைப்படுத்தத் தேவையான ஆயுதங்களைத் தரித்துக்கொண்டவர்களாவீர்கள்.

சுதந்திரம் என்பது உம்மையில் என்ன? நீங்கள் நினைக்கும், நன்கு அனுபவிக்கும் எல்லாச் சுதந்திரங்களும் உண்மை யான சுதந்திரம் ஆகிவிடா. கட்டறுத்துத் திரியும் விசர் நாய் போல அலைக்கழியும் உங்கள் மனதிலிருந்து பெறும் சுதந்திரம்தான் உண்மையான சுதந்திரமாகும்.

இந்தப் பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரும் பொருளும் தனக்கென ஒரு ஆத்மாவைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆத்மாவும் ஒருங்கிணையும்போது அவை அகிலத்தின் ஆத்மா ஆகின்றன. உங்கள் மனதுக்கும் உணர்வுக்கும் நீங்கள் உணவூட்டும்போது உண்மையிலேயே அகிலத்தின் ஆத்மாவுக்கு உணவூட்டுகிறீர்கள். நீங்கள் சீராக வழிச் செல்லும்போது உங்களைச் சுற்றியுள்ள எல்லார் வாழ்வையும் சீராக்குகிறீர்க்கள். மேலும் உங்கள் கனவுகளின் திக்கை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேறுவதற்கான ஊககமெடுக்கும்போது அகிலத்தின் சக்தியையே உங்கள்பால் கவருவதற்கு வழிசமைக்கிறீர்கள்.

Wednesday, April 1, 2009

நூலகம்

நண்பர்களின் சந்திப்பு. இவர்களில் ஒருவர் தன்னைப் பெரிதும் புகழ்ந்து கொள்பவர். அவர் ஒரு கட்டத்தில், "நான் இந்த நாட்டுக்கு வந்து இருபத்தைந்து வருடமாகிறது. இன்றைக்குத்தான் முதன்முறையாக ஒரு இடத்துக்க்குப் போனேன்." என்றார். அவரை நன்கு அறிந்த மற்றவர் ஒரு கணமும் பிந்தாமல் எழுப்பினார் கேள்வி: "லைபிரரி?"

திறமான புத்தகங்களைவிடத் திறமான நண்பர்கள் கிடையவே கிடையாது

நம்மவர்களில் பெரும்பாலானோர் நூலகப்பக்கம் போவதே இல்லை. அதற்கு நிறையவே காரணங்கள் சொல்வார்க்கள். இளைஞர்களின் உலகம் இதற்கு முற்றிலும் மாறானது.

ஒவ்வொரு முறையும் நான் ஒரு நூலகத்தினுள் நுழையும் போது ஒரு கோயிலுக்குள் நுழைவதுபோன்ற உணர்வைப் பெறுவேன். இவ்விரு இடங்களும் உள்ளும் புறமும் பரிசுத்தமானவை என்பது மடடுமல்ல என்னை உள்ளும் புறமும் பரிசுத்தமாக்குபவை. அங்கே தெய்வங்களென்றால் இங்கே புத்தகங்கள்.



"...மணல்-கல், பனைஓலை காகிதம், ஒலியிழை-ஒளியிழை கணிப்பொறி புத்தகத்தின் அவதாரம் காலந்தோறும் மாறும். வாகனம் வேறு வேறு இலக்கு ஒன்றுதான்:
மானுடம். மானுடம்"
- கவிப்பேரரசு வைரமுத்து





தெய்வங்களைப்போலவே இந்த நண்பர்களையும் பலவாறாய்ப் பிரிக்கலாம். நூல்கள், ஏட்டுச்சுவடிகள், கையெழுத்துப்பிரதிகள், சிடி, டிவிடி, வீடியோ, தேசப் படங்கள், வழிகாட்டிகள், இண்டர்னெட் இப்படியாக எலலாத்துறைகளிலும் எண்ணற்ற அறிவுக்களஞ்சியங்கள்.

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அன்றாட வழக்கமாக வைத்திருங்கள். ஒவ்வொரு நாளும் ஆகக்குறைந்தது அரைமணி நேரமாவது வாசியுங்கள். ஆனால் ஒருவன் கண்டதையும் கற்கப் பண்டிதனாகிவிடுவதில்லை. உங்கள் மனம் என்னும் தோட்டத்தில் எதனை விதைக்கப்போகிறீர்களோ அது அந்தத் தோட்டத்துக்கு ஒரு சத்துணவாகப் பயன் படவேண்டும். ஆகவே நீங்கள் வாசிக்க எடுத்துச்செல்லும் புத்தகம் உங்களையும் உங்கள் தரத்தையும் முன்னேற்றக் கூடியதாக் இருக்கவேண்டும்.

எவை அப்படியான புத்தகங்கள்? வாழ்க்கையில் வெற்றியடைந்தோரின் வாழ்க்கை வரலாறுகள். இறந்த பின்னரும் இன்றும் இசையாய், கதைகளாய், கவிதையாய், சரித்திரமாய், சுதந்திரமாய் வாழ்ந்து கொண்டிருபோரின் கருத்துக்கள். இவற்றை மீண்டும் மீண்டும் வாசியுங்கள்.

புத்தகங்கள் மானுடத்தின் மறுவடிவம். எந்தவொரு நல்ல புத்தகத்தையும் திறக்கும்போது மானிடத்தின் கதவுகளைத் திறக்கின்றீர்கள்; அதனை நேசிக்கக் கற்றுக் கொள்கிறீர்கள்.

Wednesday, March 25, 2009

முதல் வணக்கம்

நேரம் மனதை அள்ளும் மாலை. கிராமமோ நகரமோ அல்லாத ஒரு சூழலில் ஒரு ஆற்றங்கரையில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். எங்கும் அமைதி உங்கள் மனதைத் தவிர. திடீரென ஒரு தேவதூதன் உங்கள்முன் தோன்றி, "நீ விரும்பியவற்றில் மூன்றைக் கேள் தருகிறேன்" என்று கூறி உங்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளாக்கப்போவதில்லை. ஏனெனில் இது நிகழ்காலம்.
நமது தலைவிதியை நிர்ணயிக்கும் உரிமையும் சக்தியும் நம்மிடமேயுள்ளன. நமக்கு முன்னால் உள்ள காரியம் இவற்றுக்கு அப்பாற்பட்டதல்ல; அதனாலுண்டாகும் மனச்சுமையும் பாதிப்பும் எம்மால் பொறுக்கக் கூடியவையே. எமது இலட்சியத்தில் நம்பிக்கையும் அக்காரியத்தைச் செய்வோம் என்ற அசைக்க முடியாத மனவுறுதியும் நம்மிடம் இருக்கும்வரை வெற்றியை எவரும் எம்மிடமிருந்து பறித்துவிடமுடியாது.

இங்கு செய்தியென்னவெனில் நீங்கள் தேடிவந்த அழகும் அமைதியும் உங்களைச்சுற்றி எங்குமே நிறைந்திருக்கிறது. ஆனால் எப்படி நீங்கள் தேடும் "அந்த" அமைதியும் மகிழ்வும் வாழ்வும் வளமும் உங்களை வந்தடையப் போகின்றன? உங்கள் தேடுதல் தொடரும்வரை, தேடியதை அடையும்வரை துவண்டுவிடாதீர்கள். விடாமுயறசியுள்ளவர்கள் வாழ்க்கையில் தோற்றே போனார்கள் என்ற சரித்திரமேயில்லை.

வாழ்வியலையும் தனிமனித மேம்பாட்டையும் (Life Management and Personal Development) பற்றிய ஆய்வில் நான் நீண்டகாலம் ஈடுபட்டிருந்தேன். எனது தொழில் சார்ந்த பயிற்சியும் தனிப்பட்ட முயற்சியும் நல்ல நண்பர்களின் தொடர்பும் இந்த ஆய்வுக்குத் தொடர்பான நூல்களைக் கற்கவும் கலந்துரையாடல்களில் மனம் செலுத்தவும் வாய்ப்புகளைத் தேடித்தந்தன. எனது சொந்த அனுபவங்களும் இந்த ஆய்வுகளுக்கும் பயிற்சிகளுக்கும் துணை நிற்கவே இதில் ஆழ்ந்த பற்றுடையவனாகி இத்துறையில் நன்றாய் விதந்துரைக்கப்பட்ட வழிவகைகளைத் தமிழில் வெளியிட ஒரு வடிகாலைத் தேடிக் கொண்டிருந்தேன். எனது நண்பர்களின் தூண்டுதலும் கணனித் துறையிலான உதவிகளும் எனது எண்ணங்களை இங்கே எழுத்துருவாக்க உதவின. அவர்களுக்கு என் நன்றிகள். இந்தத் தினத்திலிருந்து உங்களுடன் உறவாடப் போகின்றேன். இதன் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் உங்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பைத் தருவீர்களென நம்புகிறேன்.
நன்றி. ராஜாஜி

About Me