மாண்புற வாழ்க

- ராஜாஜி ராஜகோபாலன்

Saturday, February 26, 2011

பெரியாரைத் துணைக்கோடல்

இது அந்தக்காலக் கொழும்பு வாழ்க்கை. நல்ல படிப்பு, நல்ல உத்தியோகம், நிறையவே நண்பர்கள், நிறையவே எதிரிகள். மொத்தத்தில் வாழ்க்கை சுவாரஷ்யமாகவே இருந்தது.

எனது அலுவலகத்தில் "பெரியவருக்கும்" எனக்குமிடையெ நல்ல நட்புணர்வும் நெருக்கமும் ஏற்பட ஆரம்பத்திலேயே வாய்ப்புகள் வந்துசேர்ந்தன. அவற்றை நான் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டேன். இந்த உறவு இருவரும் ஒரே துறையில் பட்டம் பெற்று ஒரே நோக்கும் ஆர்வமும் உடையவர்களாய்ச் செயலாற்றி வந்ததால் மட்டுமல்ல இருவர் கருத்தும் கண்ணோட்டமும் பெரிதும் நெருக்கமுடையனவாயிருந்ததாலும் ஏற்பட்டதேயாகும். இவையே காலப்போக்கில் நான் எனது கடும் உழைப்பினால் தேட எண்ணிய பதவியுயர்வுக்கு என்னைத்தயார்படுத்தியதோடு அப்பதவியிலும் என்னை இருத்தின.

அலுவலகத்திலோ அல்லது வேறு தொழில் சூழலிலோ நமக்கு மேலாளராக இருப்பவர்கள் நமது விதியைத் திருத்தி எழுதும் பிரம்மாக்களாக உருவாகும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. ஆகக்குறைந்தது எமது தொழில் வாழ்க்கை தொடர்பான விதியில் அவர்கள் தங்கள் வலிமைமிக்க கரங்களை ஆழப்பதிப்பதில் அக்கறை யுடையவர்களாக இருப்பார்கள்.. நம்மாலும் இதிலிருந்து தப்பமுடியாமற் போவதுண்டு. ஏனெனில் தொழில் என்பது எமது வாழ்க்கைப் போராட்டத்தில் வலிமைமிக்க தேவைப்பாடாக இருப்பதினாலேயாகும்.

நீங்கள் உங்கள் மேலாளருடன் நல்லுறவையும் நல்லெண்ணத்தையும் சம்பாதிப்பதில் அக்கறையுடையவர்களாக இருப்பீர்களேயாயின் தொழில் வாழ்வில் ஒவ்வொரு வெற்றிக்கும் வழி கோலியவர்களாவீர்கள்.

இக் கைங்கரியத்தை நான் நல்லபடியாகவே செய்து கொண்டிருந்தபோது எனக்குத் தாராளமாகவே வந்து சேர்ந்த பட்டம் "பந்தம் பிடிப்பவன்".

உங்களுடன் கூட வேலை செய்பவர்களின் சிந்தனைச் செறிவை அவர்கள் மற்றவர்களைக் கணக்கெடுப்பதிலிருந்தும் விமர்சனம் செய்வதிலிருந்தும் அனுமானித்துக் கொள்ளலாம். பந்தம் பிடிப்பவன், குழையடிப்பவன் போன்ற பட்டங்களை மற்றவர்கள்மீது சுமத்துபவர்கள் உண்மையிலேயே இத்துறையில் மிக வல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் வெவ்வேறான மேலாளர்களுக்கேற்பத் தமது செயல் திறனைப் பிரயோகிக்கும் வல்லமை இவர்களிடம் இருப்பதில்லை. இதுதான் அவர்களிடமிருக்கும் பலவீனம். இங்கு எமது பலம் என்னவெனில் இதைப் பற்றி எந்தவித அக்கறையும் எடுக்காமலிருப்பதுதான்.

நான் பெருமையுடன் இப்பட்டத்தை ஏற்றுக்கொண்டேன்.

நன்றாகத்தான் சொன்னார் வள்ளுவர்: தம்மிலும் மூத்த அறிஞ்ஞர்களைத் தேர்ந்து அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமென்பதைப் பெரியாரைத் துணைக் கோடல் என்னும் கோட்பாடாக அவர் வலியுறுத்துகிறார்.

அறமுணர்ந்த மூதறிஞ்ஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். *

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்.

நாம் எத்துணைத் திறமைசாலிகளாக இருப்பினும் ஒரு சில வேளைகளில் திடீரென வந்து எம்மை எதிர் நோக்கும் சிக்கலைக் கண்டு திணறிப்போவதுண்டு. இத்தகைய வேளைகளில் நமக்குத் துணை நின்று உதவுபவர்களும் இவை போன்றவை மீண்டும் நம்மை எதிகொள்ளாவண்ணம் முன்னின்று காக்கவல்ல திறமையுடையவர்களும் நாம் அன்றாடம் அணுகும் சான்றோரேயாவர். *

உற்ற நோய் நீங்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.

வள்ளுவரின் பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அறம் இன்று பந்தம் பிடித்தல் எனக் கருதப்படுமானால் நன்றாகவே பந்தம் பிடியுங்கள். ஏனெனில் இது உங்கள் வாழ்க்கை. இதனை வெற்றிகொள்ள உங்களை எதிர் நோக் கும் எந்தச் சவாலையும் சந்திக்க உங்களைத் தயார் செய்யும்போது பட்டங்கள் மட்டுமல்ல சதிகள் சறுக்கல்கள் மற்றும் இன்னும் எத்தனையோ இடர்ப்பாடுகள் எவ்வேளையிலும் உங்களை இடறவைக்கலாம்.

அறிவும் ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்க்களால் எந்தத் தீங்க்கையும் விளைவிக்க முடியாது. *

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில்.

* கலைஞர் மு. கருணாநிதி உரை

Sunday, February 20, 2011

கவிதை நெறி


பிறர்க்குச் சிந்தக்
கண்ணீர் கொடுங்கள்
எனக்குச் சிந்த
வேர்வை கொடுங்கள்
*****

எல்லாரும் சிரிக்கின்ற வாழ்வுகொடுங்கள்
எதிரியும் அழுகின்ற மரணம் கொடுங்கள்
*****

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது
*****

ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது
*****

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை
*****
தோல்வி என்னும் சொல்லைத்
தொலைத்து
விலகி நிற்கும் வெற்றியென்றுரைப்போம்
*****

எரிமலை துப்பியது
ஐம்பது கிலோ மீட்டர்
அக்கினிக் குழம்பு
எந்தக் குடிமகனும்
இடம் பெயரவில்லை
அக்கினிக் குழம்பின் ஆறிய சாம்பலில்
உழுது பயிரிட்டதில்
ஆறுமடங்கு அமோகவிளைச்சல்.
எரிமலை சொன்னது:
"எந்தவொரு தீமையிலும்
இன்னோர் நன்மையுண்டு”
*****

மனமே!
இழிந்தவர்க்கும் கூட
இன்னும் பணிவு காட்டு
சாக்கடையிலும்
தாழ்ந்து பணிந்தோடும்
தண்ணீர்பொல
*****

எல்லா மனிதரையும்
இரு கேள்வி கேளுங்கள்
பொழுது
மலச்சிக்கல் இல்லாமல்
விடிகிறதா?
மனச்சிக்கல் இல்லாமல்
முடிகிறதா?
*****

சாப்பாட்டு மேசையும்
கட்டிலும்
தொட முடியாத
தூரத்தில்
இருக்கட்டும்
*****

தம்பி!
சாவைச்
சாவு தீர்மானிக்கும்
வாழ்க்கையை
நீ தீர்மானி
*****

புரிந்துகொள்
சுடும் வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி
போராடும் வரைக்கும்
மனிதன்
நீ மனிதன்
*****

ஒன்றை மறவாதே
உன்னிலும் உயர்ந்தது
உலகினில் இல்லை
இன்னொன்றும் மறவாதே
உன்னிலும் தாழ்ந்ததும்
உலகினில் இல்லை
*****

உள்ளம் உள்ளம் பெரிதாய் இருந்தால்
உலகம் ரொம்பச் சின்னதடா
ஊனப்பட்ட நிலவும் ஒருநாள்
பௌர்ணமி ஆகுமடா
*****

விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை
புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணிச்
சலிக்கும் மனதில் சந்தோசமில்லை
நாளை என்பதில் நம்பிக்கை வைத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்துப்
புன்னகை அணிந்து போரை நடத்து
*****

நன்றி: கவிப்பேரரசு வைரமுத்து

Friday, February 18, 2011

கண்மணி

ஒவ்வொரு நாட்காலையும் அவளை நான் காணும்போது அப் போதுதான் துயிலெழுந்து முகம் திருத்தி வந்தவள்போன்ற பொலிவுடன் தோன்றுவாள். அவளைக் கண்டதும் நான் கேட்கும் முதல் கேள்வி “How are you?” அதற்கு அவளிட மிருந்து உடனே பதில் வரும்: “I am fine” கூடவே அவள் முகத்தில் ஒரு புன்னகையோடு கலந்த மலர்ச்சி.

ரொராண்டோ நகரின் யூனிவர்சிடி அவனியு. இருமருங்கும் விண்ணைமுட்டும் கட்டிடங்கள். அவற்றினூடாகப் புகுந்து விளையாடும் மென்மையான தென்றல். முகத்திலடிக்காத காலை வெயில். இந்த வேளையில் அலுவலகத்துக்கு நடைபயில்வதே ஒரு அலாதியான அனுபவம்.

யூனிவர்சிடி அவெனியு/கிங் வீதி சந்திப்பின் வடமேற்கு மூலையில் அவளை நான் முதலில் சந்தித்தேன். அதன் பிறகு நான் நேரத்தோடு அலுவலகத்துக்குப்போகும் ஒவ்வொரு காலையும் அவளை நான் அங்கே சந்திக்கத் தவறியதில்லை. அந்த மூலையில் நெடு நேரம் எனக்காகக் காத்திருந்தவள் போல் அவள் நிற்பாள். கையில் தூக்கமுடியாத் சுமை. ஆயினும் துவண்டு போகாமல் நடைபாதையில் விரைந்து கொண்டிருப்போர் ஒவ்வொருவரையும் ஒரு கணத்துக்குள் சந்தித்து ஒவ்வொருவரிடமும் தன்கையிலுள்ள இலவச Metro பத்திரிகையைத் திணித்துவிடும் அழகையும் தொழில் நுட்பத்தையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

இந்த இரக்கமற்ற நகரச்சூழலில் இவள் ஏன் வந்து மாட்டிக்கொண்டாள் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். இவ்வளவுக்கும் அவளுக்குப் பத்துவயது இருக்கலாம். முழுக்க முழுக்க யாழ்ப்பாணத்துப் பெண். வட்டவடிவமான கண்கள். நடுவே கரிய விழிகள். எவரையும் கவர்ந்துவிடக்கூடிய காந்த சக்தியைத் தேக்கிவைதிருக்கும் அவள் கண்களை நான் முதலில் சந்தித்தபோது கொஞ்சம் அதிந்துதான்போனேன். அவளுக்கு நான் வைத்த பெயர் கண்மணி

இலவசப்பத்திரிகையை வினியோகிப்பதற்கு அதிகம் திறமை தேவையில்லையென்று நினைப்பீர்க்கள். இது சோம்பேறிகள் நடமாடும் சந்தியில்லை. எல்லாரும் அவசர உலகத்தின் பிரதிநிதிகள். இன்று வண்டியிலிருந்து இறங்கிய கையிருப்பு முழுவதையும் அவர்கள் கையில் திணித்துவிடவேண்டும். அதுவும் காலை பத்து மணிக்குள். கண்மணியின் அன்றாடச் செயற்பாடு அல்லது தொழில் வாழ்க்கை மிகச்சிறியது. ஆயினும் அதில் அவள் அளப்பற்ற வெற்றியும் மகிழ்ச்சியும் அடைந்தவள் போலவே எனக்குத் தோன்றுவாள்.

நீங்கள் செய்யும் தொழில் மிகவும் எளிமையானதாக இருக்கலாம், உடல் ரீதியானதாக இருக்கலாம். உதாரணமாக, நீங்கள் அன்றாடக் கூலி வேலைக்குப் போகிறவராகவோ குப்பை அள்ளுகிறவராகவோ இருக்கலாம். ஆயினும் நீங்கள் செய்யும் எந்தத் தொழிலையும் நீங்கள் வாழும் உலகை மேம்படச் செய்யும் ஒரு சந்தர்ப்பமாகக் கருதிச் செய்வீர்களேயானால் ஒரு இலட்சியதை நிறைவேற்றவெண்ணி அதனைச் செய்வதுபோன்ற உணர்வுடையவராகவும் சேவை மனப்பான்மை உடையவராகவும் உங்களை உயர்த்திக் கொள்வீர்கள்.

மகாத்மா காந்தி நன்கு அவதானித்து அறிந்தபின்னர்த்தான் கூறினார்: நீங்கள் செய்யப்போகும் பணி முக்கியத்துவம் வாய்ந்ததா இல்லையா என்பது அவசியமில்லை, உங்களால் முடிந்த அளவு அதனைச் சிறப்பாகச் செய்யுங்கள் அதை உங்கள் மிக முக்கியமான பணியெனக் கருதி உங்கள் முழு அறிவையும் கவனத்தையும் அதன்மீது செலுத்துங்கள். அது சிறிய பணியாக இருக்கலாம் ஆனால் அதனை எப்படி ஆற்றினீர்கள் என்பதிலிருந்துதான் நீங்கள் மதிப்பிடப்படுவீர்கள்.

கண்மணி சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுமி. அவள் ஒரு சிலர் போலப் பெயர் பெற்றவளில்லை. சிறிய பணியாக இருந்தபோதும் அவள் அதனை ஆற்றிய அழகு என்னை ஆழமாய்ச் சிந்திக்கவைத்தது.

கண்மணி போன்றோரே இன்று நமக்கு உந்துசக்தியாக இருக்கிறார்கள். இவள் போன்றோரே இந்தக் குழப்பம் மிகுந்த உலகத்தில் தலைமைத்துவத்துக்கு எமக்குத் தேவைப்படுகிறார்கள்.

About Me