மாண்புற வாழ்க

- ராஜாஜி ராஜகோபாலன்

Saturday, February 26, 2011

பெரியாரைத் துணைக்கோடல்

இது அந்தக்காலக் கொழும்பு வாழ்க்கை. நல்ல படிப்பு, நல்ல உத்தியோகம், நிறையவே நண்பர்கள், நிறையவே எதிரிகள். மொத்தத்தில் வாழ்க்கை சுவாரஷ்யமாகவே இருந்தது.

எனது அலுவலகத்தில் "பெரியவருக்கும்" எனக்குமிடையெ நல்ல நட்புணர்வும் நெருக்கமும் ஏற்பட ஆரம்பத்திலேயே வாய்ப்புகள் வந்துசேர்ந்தன. அவற்றை நான் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டேன். இந்த உறவு இருவரும் ஒரே துறையில் பட்டம் பெற்று ஒரே நோக்கும் ஆர்வமும் உடையவர்களாய்ச் செயலாற்றி வந்ததால் மட்டுமல்ல இருவர் கருத்தும் கண்ணோட்டமும் பெரிதும் நெருக்கமுடையனவாயிருந்ததாலும் ஏற்பட்டதேயாகும். இவையே காலப்போக்கில் நான் எனது கடும் உழைப்பினால் தேட எண்ணிய பதவியுயர்வுக்கு என்னைத்தயார்படுத்தியதோடு அப்பதவியிலும் என்னை இருத்தின.

அலுவலகத்திலோ அல்லது வேறு தொழில் சூழலிலோ நமக்கு மேலாளராக இருப்பவர்கள் நமது விதியைத் திருத்தி எழுதும் பிரம்மாக்களாக உருவாகும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. ஆகக்குறைந்தது எமது தொழில் வாழ்க்கை தொடர்பான விதியில் அவர்கள் தங்கள் வலிமைமிக்க கரங்களை ஆழப்பதிப்பதில் அக்கறை யுடையவர்களாக இருப்பார்கள்.. நம்மாலும் இதிலிருந்து தப்பமுடியாமற் போவதுண்டு. ஏனெனில் தொழில் என்பது எமது வாழ்க்கைப் போராட்டத்தில் வலிமைமிக்க தேவைப்பாடாக இருப்பதினாலேயாகும்.

நீங்கள் உங்கள் மேலாளருடன் நல்லுறவையும் நல்லெண்ணத்தையும் சம்பாதிப்பதில் அக்கறையுடையவர்களாக இருப்பீர்களேயாயின் தொழில் வாழ்வில் ஒவ்வொரு வெற்றிக்கும் வழி கோலியவர்களாவீர்கள்.

இக் கைங்கரியத்தை நான் நல்லபடியாகவே செய்து கொண்டிருந்தபோது எனக்குத் தாராளமாகவே வந்து சேர்ந்த பட்டம் "பந்தம் பிடிப்பவன்".

உங்களுடன் கூட வேலை செய்பவர்களின் சிந்தனைச் செறிவை அவர்கள் மற்றவர்களைக் கணக்கெடுப்பதிலிருந்தும் விமர்சனம் செய்வதிலிருந்தும் அனுமானித்துக் கொள்ளலாம். பந்தம் பிடிப்பவன், குழையடிப்பவன் போன்ற பட்டங்களை மற்றவர்கள்மீது சுமத்துபவர்கள் உண்மையிலேயே இத்துறையில் மிக வல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் வெவ்வேறான மேலாளர்களுக்கேற்பத் தமது செயல் திறனைப் பிரயோகிக்கும் வல்லமை இவர்களிடம் இருப்பதில்லை. இதுதான் அவர்களிடமிருக்கும் பலவீனம். இங்கு எமது பலம் என்னவெனில் இதைப் பற்றி எந்தவித அக்கறையும் எடுக்காமலிருப்பதுதான்.

நான் பெருமையுடன் இப்பட்டத்தை ஏற்றுக்கொண்டேன்.

நன்றாகத்தான் சொன்னார் வள்ளுவர்: தம்மிலும் மூத்த அறிஞ்ஞர்களைத் தேர்ந்து அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமென்பதைப் பெரியாரைத் துணைக் கோடல் என்னும் கோட்பாடாக அவர் வலியுறுத்துகிறார்.

அறமுணர்ந்த மூதறிஞ்ஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். *

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்.

நாம் எத்துணைத் திறமைசாலிகளாக இருப்பினும் ஒரு சில வேளைகளில் திடீரென வந்து எம்மை எதிர் நோக்கும் சிக்கலைக் கண்டு திணறிப்போவதுண்டு. இத்தகைய வேளைகளில் நமக்குத் துணை நின்று உதவுபவர்களும் இவை போன்றவை மீண்டும் நம்மை எதிகொள்ளாவண்ணம் முன்னின்று காக்கவல்ல திறமையுடையவர்களும் நாம் அன்றாடம் அணுகும் சான்றோரேயாவர். *

உற்ற நோய் நீங்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.

வள்ளுவரின் பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அறம் இன்று பந்தம் பிடித்தல் எனக் கருதப்படுமானால் நன்றாகவே பந்தம் பிடியுங்கள். ஏனெனில் இது உங்கள் வாழ்க்கை. இதனை வெற்றிகொள்ள உங்களை எதிர் நோக் கும் எந்தச் சவாலையும் சந்திக்க உங்களைத் தயார் செய்யும்போது பட்டங்கள் மட்டுமல்ல சதிகள் சறுக்கல்கள் மற்றும் இன்னும் எத்தனையோ இடர்ப்பாடுகள் எவ்வேளையிலும் உங்களை இடறவைக்கலாம்.

அறிவும் ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்க்களால் எந்தத் தீங்க்கையும் விளைவிக்க முடியாது. *

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில்.

* கலைஞர் மு. கருணாநிதி உரை

No comments:

About Me