மாண்புற வாழ்க

- ராஜாஜி ராஜகோபாலன்

Sunday, February 20, 2011

கவிதை நெறி


பிறர்க்குச் சிந்தக்
கண்ணீர் கொடுங்கள்
எனக்குச் சிந்த
வேர்வை கொடுங்கள்
*****

எல்லாரும் சிரிக்கின்ற வாழ்வுகொடுங்கள்
எதிரியும் அழுகின்ற மரணம் கொடுங்கள்
*****

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது
*****

ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது
*****

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை
*****
தோல்வி என்னும் சொல்லைத்
தொலைத்து
விலகி நிற்கும் வெற்றியென்றுரைப்போம்
*****

எரிமலை துப்பியது
ஐம்பது கிலோ மீட்டர்
அக்கினிக் குழம்பு
எந்தக் குடிமகனும்
இடம் பெயரவில்லை
அக்கினிக் குழம்பின் ஆறிய சாம்பலில்
உழுது பயிரிட்டதில்
ஆறுமடங்கு அமோகவிளைச்சல்.
எரிமலை சொன்னது:
"எந்தவொரு தீமையிலும்
இன்னோர் நன்மையுண்டு”
*****

மனமே!
இழிந்தவர்க்கும் கூட
இன்னும் பணிவு காட்டு
சாக்கடையிலும்
தாழ்ந்து பணிந்தோடும்
தண்ணீர்பொல
*****

எல்லா மனிதரையும்
இரு கேள்வி கேளுங்கள்
பொழுது
மலச்சிக்கல் இல்லாமல்
விடிகிறதா?
மனச்சிக்கல் இல்லாமல்
முடிகிறதா?
*****

சாப்பாட்டு மேசையும்
கட்டிலும்
தொட முடியாத
தூரத்தில்
இருக்கட்டும்
*****

தம்பி!
சாவைச்
சாவு தீர்மானிக்கும்
வாழ்க்கையை
நீ தீர்மானி
*****

புரிந்துகொள்
சுடும் வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி
போராடும் வரைக்கும்
மனிதன்
நீ மனிதன்
*****

ஒன்றை மறவாதே
உன்னிலும் உயர்ந்தது
உலகினில் இல்லை
இன்னொன்றும் மறவாதே
உன்னிலும் தாழ்ந்ததும்
உலகினில் இல்லை
*****

உள்ளம் உள்ளம் பெரிதாய் இருந்தால்
உலகம் ரொம்பச் சின்னதடா
ஊனப்பட்ட நிலவும் ஒருநாள்
பௌர்ணமி ஆகுமடா
*****

விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை
புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணிச்
சலிக்கும் மனதில் சந்தோசமில்லை
நாளை என்பதில் நம்பிக்கை வைத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்துப்
புன்னகை அணிந்து போரை நடத்து
*****

நன்றி: கவிப்பேரரசு வைரமுத்து

No comments:

About Me